நியூயார்க் மாவீரர் நாள் உரை: பேராசிரியர் மு.நாகநாதன்

பேராசிரியர் மு.நாகநாதன் – நியூயார்க்

‘தந்தை செல்வா தளம் அமைத்தார், தலைவர் பிரபாகரன் களம் அமைத்தார்’

நியூயார்க், அமெரிக்கா, January 10, 2018 /EINPresswire.com/ —

மாவீரர் நாள் உரை
பேராசிரியர் மு.நாகநாதன்

நாள்: 27.11.2017
இடம் :நியூயார்க்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதிப்புமிக்க பிரதமர் திருவாளர்.ருத்ரகுமாரன் அவர்களே, இவ்வரசின் பொறுப்பாளர்களே, இங்குத் திரண்டிருக்கும் நண்பர்களே, தாய்மார்களே, இளைஞர்களே வணக்கம்.

தமிழர்கள் அனைவரும் மாவீரர் நாளை என்றும் நினைவுகூறுதல்; இன்றியமையாதது. தங்களின் இன்னுயிரைஈந்து பெரும் தியாகங்களைப் புரிந்து ஈழத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நாம் இன்று நினைவு கூர்கிறோம். தமிழீழத்தின் தேசியத் தலைவராகப் போற்றப்படுகிற மேதகு பிரபாகரன் உலகத் தமிழர்களின் தலைவராக இன்றும் போற்றப்படுகிறார். தமிழீழத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும், தமிழர்கள் வாழ்கின்ற உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இன்று மாவீரர் தினம் பின்பற்றப்படுகிறது. சங்க காலத்தில் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு நடுகல் வணக்கம் செய்யும் மரபு பின்பற்றப்பட்டது. இதைப்பற்றிய விளக்கங்கள் பல சங்க இலக்கியங்களில் பரந்து காணப்படுகின்றன. இந்த உயரிய தமிழ் மரபை மீட்டெடுத்து ஈழப்போரில் உயிர்நீத்த ஈகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளைத் தமிழ் மரபாக மாற்றி, முதன்முதலாக 1989 ஆம் ஆண்டு மேதகு பிரபாகரன் மாவீரர் நாள் உரையை நிகழ்த்தினார். அன்று முதல் இந்த மாவீரர் நாள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிகழ்வில் நான் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கு அழைத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு எனது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

26.11.2017 நியூயார்க் நகரில் அமைந்துள்ள அறிஞர் தாமஸ் பெயின் நினைவிடத்திற்குச் சென்றேன். இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்குக் குடிப்பெயர்ந்து,அமெரிக்க விடுதலைக்காக முழக்கமிட்ட உலகப் பெரும் அறிஞர்களில் ஒருவர்தான் தாமஸ் பெயின். இந்திய விடுதலைப் போர் வரலாற்றை எடுத்துக்கொண்டால்கூட காங்கிரசு என்ற இயக்கத்தை உருவாக்கியவர் இங்கிலாந்து நாட்டைசை; சார்ந்த ஹியூம் என்பவர் ஆவார். உலகத் தலைவராகப் போற்றப்படுகிற காந்தியார் இந்தியாவினுடைய தேசியத்திற்கு வித்திட்டவர்கள் என்று ஹியூம், வெடர்பர்ன் என்கிற இரு இங்கிலாந்து அறிஞர்களைக் குறிப்பிட்டுள்ளார். அதே போன்றுதான் தேசியம் என்ற கருத்துருவாக்கத்திற்கு வித்திட்டவர் தாதாபாய் நௌரோஜி என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வகையில்தான் தாமஸ் பெயினும் அமெரிக்க விடுதலைப் போருக்குத் துணைநின்றவர். அவர் வாழ்ந்த எளிமையான இல்லத்தை நினைவுச்சின்னமாக அமெரிக்க அரசு சிறப்பான முறையில் அமைத்துள்ளது. “எங்கே மோதல் கடுமையாக உள்ளதோ, அங்கேதான் வெற்றியும் புகழ்மிக்கதாக இருக்கும்” என்று அறிஞர் தாமஸ் பெயின் குறிப்பிட்டார். இதே நிலைதான் ஈழத்திற்கும் பொருந்துவதாக உள்ளதாகக் கருதுகிறேன்.

சிங்களப் பேரினவாத இராணுவ அரசிடம் கடுமையான மோதல்களைத் தொடர்ந்து சந்தித்து வரும் தமிழினம் ஒருநாள் ஈழத்தை வென்று புகழ்மிக்க தமிழர் அரசை உருவாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தமிழர்கள் உலகின் மூத்த குடிமக்கள் ஆவர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலால் நாம் பிரிக்கப்பட்டோம். இன்றைக்கும் பல ஆய்வு நூல்கள் இதைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. குமரிக்கண்டம் என்ற ஓர் அமைப்பு தமிழர்களின் நிலமாக அமைந்து புகழோடு வாழ்ந்ததற்கான சான்றுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

2016ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இலங்கையில் சிங்களவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரு கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்கள் 30 இலட்சம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழர்கள் கண்டத்திற்கு கண்டம் இன்று பரந்து வாழ்கின்றனர். தமிழர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை ஏறக்குயை 10 கோடிக்கு மேல் உள்ளது. அமெரிக்க சுதந்திரப் போரின் போது தாமஸ் பெயின் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். ஒரு சிறிய தீவு அமெரிக்கக் கண்டத்தை நிரந்தரமாக அடக்கி ஆள முடியாது என்றார். அதுபோல்தான் கண்டங்கள் கடந்து வாழும் 10 கோடி தமிழர்களை ஒரு கோடி சிங்களவர்கள் நிரந்தரமாக ஆள முடியாது என்பதை சிங்கள இனவெறி ஆட்சியாளர்களும், அவர்களுக்குத் துணை நிற்பவர்களும் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை.

தமிழ் மொழியும் மிகத் தொன்மையான உலக மொழிகளில் மூத்த மொழியாகப் பிறந்து இன்றைக்கு உலகில் வாழும் தமிழர் அனைவருக்கும் தாய்மொழியாக உயர்ந்து வருகிறது. தனித்தன்மையோடு இன்றும் செம்மொழியாக இயங்கி வருகிறது. தமிழ்மொழியைப் பொறுத்த வரை பல காலக்கட்டங்களில் தன்னோடு இணைந்த பல சமயப் பிரிவுகளை அனைத்துக்கொண்டது. வரலாற்றின் காலக்கட்டங்களில் பல சமய பிரிவினரிடம் மோதல்கள் இருந்துள்ளன. ஆனால் தமிழ் மொழி ஒன்றுதான் அனைத்துச் சமயப் பிரிவினரையும் தன்னுள் இணைத்துக்கொண்ட உலகின் மொழியாக (ஐnஉடரளiஎந டுயபெரயபந) உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணம், பௌத்தம், கிறித்தவம், சைவம், வைணவம் ஆகிய அனைத்து சமயங்களின் காப்பியங்களும் தமிழில் உள்ளன. இசுலாமியக் காப்பியமும் தமிழில் உள்ளது. இன்று அனைத்துச் சமயப் பிரிவினரும் தங்களைத் தமிழர் என்று பறைசாற்றிக்கொள்வதில் பெருமை கொள்கின்றனர்.

இத்தகைய வரலாற்று பெருமை கொண்ட தமிழினத்தின் மீது இலங்கையில் கடந்த 68 ஆண்டுகளாகத் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தந்தை செல்வா தலைமையில் அமைதிவழியில் போராட்டமும், நாடாளுமன்ற ஜனநாயக முறையும் முன்னிறுத்தப்பட்டன. தந்தை செல்வாவின் நாடாளுமன்ற உரைகள் தக்க சான்றுகளாக உள்ளன. ஆனால், தொடர்ந்து தமிழர்களின் மொழியுரிமையும்,வாழ்வுரிமையும் மறுக்கப்பட்டதால்தான் தனி ஈழம் என்ற கோரிக்கையைத் தந்தை செல்வா அறிவித்தார். ‘தந்தை செல்வா தளம் அமைத்தார், தலைவர் பிரபாகரன் களம் அமைத்தார்’ என்று கவிஞர் காசி ஆனந்தன் அருமையாகக் குறிப்பிட்டுள்ளாhர்.

நான் ஒரு பேராசிரியராக, ஆய்வாளராக பல நாடுகளுக்குச் சென்றுள்ளேன். அங்குள்ள அரசியல் தன்மைகளை ஆய்வு செய்திருக்கிறேன். அதனடிப்படையில் இலங்கையில் இருப்பது ஒரு ஜனநாயக அரசே இல்லை என்பதை என்னால் உறுதியாகக் குறிப்பிட முடியும். அங்கிருப்பது ஓர் இராணுவ அரசாகும். இலங்கையின் பொருளாதாரத்தைத் தற்போது ஒப்பிட்டுப் பார்த்தால் மக்கள்நலத் திட்டங்களுக்குச் செலவிடுவதைவிட இராணுவத்தின் செலவுதான் பெருகி வருகிறது. இதன் காரணமாக, உள்நாட்டு வெளிநாட்டு கடன்கள் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு சமமாக கடனளவு உள்ளது. அண்மையில் வந்த சில தரவுகள்- சிங்கள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாகக் குறிப்பிடுகின்றன. கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர் குழந்தைகள் சிங்கள குழந்தைகளைவிட ஊட்டச்சத்து குறைவில் அதிகம் உள்ளனர். ஆகவே, சிங்கள அரசினை இராணுவ அரசு என்றே குறிப்பிட வேண்டும்.

2009இல் முள்ளிவாய்க்கால் போரில் தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். அவர்களுக்கான நீதியை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியும் பன்னாட்டு விசாரணையைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகின்றனர். இப்பன்னாட்டு விசாரணையைத் தொடர்ந்து மறுத்துவந்த போதிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தில் உரிய முறையில் முறையிட்டு ஒரு நீதியரசரின் தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. போர்க்குற்றவாளிகளை அடையாளம் கண்டு உரிய தண்டனைகளை வழங்குவதற்குஇந்த விசாரணைக் குழு முதல் படி என்று கருதுகிறேன். தமிழீழப் போராட்டம் ஒரு தொடர்ச்சியான போராட்டமாகும். போரில் ஏற்பட்ட ஒரு பின்னடைவு இந்தப் போராட்டத்தின் நீண்ட கால வெற்றியைத் தடுத்து நிறுத்த இயலாது. உலகின் விடுதலைப் போர்களை அறிந்தவர்கள் இதை நன்றாக உணர்வர்.

ஈழ விடுதலையை விரைவில் அடைவதற்குத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். தமிழர்களிடம் உள்ள குறையே ஒற்றுமை இன்மை என்பதை நான் பல காலக்கட்டங்களில் உணர்ந்திருக்கிறேன். அந்தச் சிறுசிறு வேறுபாடுகளை எல்லாம் களைந்துவிட்டு ஒரே அணியில் நாம் நின்று ஈழ விடுதலைக்குப் பாடுபட வேண்டும். பல அரசியல் கருத்துகள் இன்றைய உலகில் முன்வைக்கப்படுகின்றன. ஆதைத்தான் புவிசார் அரசியல் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், புவிசார் அரசியல் காலத்திற்குக் காலம் மாறிவரும் சூழலும் உள்ளது. எனவே, உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்ததந்த நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களைச் சந்தித்துத் தமிழர்களுக்கான உரிமையையும், நீதியையும் பெற வேண்டும். அதற்குரிய அழுத்தத்தையும் நாம் அளிக்க வேண்டும். அப்படிப்பட்ட தொடர் அழுத்தத்தின் காரணமாகத்தான் அரசியல் சூழல்கள் நமக்கு சாதகமாக மாறும். இலங்கை இராணுவ அரசு நிரந்தரமாகப் பொய்யைக்கூறிப் பல நாடுகளின் தலைவர்களை ஏமாற்றி,ஈழத்தின் விடுதலையைத் தடுத்துவிட முடியாது. ஈழத்தை வென்றெடுப்பதற்கு இந்த மாவீரர் நாளில் நாம் ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்ற உறுதி ஏற்க வேண்டும். அதுவே அந்த மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான காணிக்கையாகும் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன்.

பேராசிரியர் மு.நாகநாதன்
நியூயார்க் – மாவீரர் நாள் உரை
+1-212- 290- 2925
email us here


Source: EIN Presswire