எழுகதமிழ் : இலங்கைத்தீவைக் கடந்து ஒலிக்கும் தமிழர் குரல் !!

Eluga Thamil

செப்ரெம்பர் 16ம் நாளன்று யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஒலிக்கவுள்ள 'எழுகதமிழ்' எழுச்சி நிகழ்வுக்கு வலுச்சேர்க்க, புலம்பெயர் தமிழர்களின் நிகழ்வுகள் இடம்பெறுகின்றது

இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருந்தாலும், தமதுக்கு கிடைக்கின்ற வெளியில் தமது உணர்வுகளையும் வெளியுலகிற்கும், சிங்கள தேசத்திற்கும் எடுத்துக்காட்டும் ஒரு எழுச்சி நிகழ்வாக இது இருக்கின்றது.

— – சுதன்ராஜ்

PARIS, FRANCE, September 10, 2019 /EINPresswire.com/ —

சிங்கள தேசம் தனது அதிபர் தேர்தலுக்கான பரபரப்பில் மூழ்கியிருக்க, தமிழர் தேசம் தனது நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான குரலை மீண்டு ஒரு தடவை ஓங்கி ஒலிக்க, எழுக தமிழாக தயாராகி வருகின்றது.

எதிர்வரும் செப்ரெம்பர் 16ம் நாளன்று யாழ்ப்பாணம் முற்றவெளியில் மக்களின் எழுச்சியாக ஒலிக்கவுள்ள 'எழுகதமிழ்' ஆறு அம்ச கோரிக்கைகளை உலகிற்கு முன்வைக்கின்றது.

1. எமது பூர்வீக நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
2. சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்கு நிலை மாற்றப்பட்டு உடனே சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை நடத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
3. தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் யாவரும் சர்வதேச சட்டக் கொள்கைகளுக்குப் புறம்பான சட்டமொன்றினால் குற்றவாளிகள் ஆக்கப்பட்டவர்கள் என்பதை உலகறியச் செய்ய வேண்டும்.
4. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான நம்பத்தகு விசாரணைகள் நடைபெற வேண்டும்
5. வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்.
6. இடம்பெயர்ந்த எம் மக்கள் அனைவரும் அவரவர்களின் பாரம்பரிய காணிகளில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்.

** ஆகிய கோரிக்கைகள் தமிழர் தாயகத்தில் முன்வைக்கப்பட்டிருக்க, இவ் எழுச்சி நிகழ்வுக்கு வலுச்சேர்க்க, அமெரிக்காவின் நியு யோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன், புலம்பெயர் தமிழர்களின் எழுச்சி நிகழ்வாக சமவேளையில் எழுக தமிழ் இடம்பெறுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் பல்வேறு தமிழர் அமைப்புக்களும் கூட்டாக தமது தோழமையினைத் தெரிவித்துள்ள இந்த எழுச்சி நிகழ்வானது, மேலதிகமாக மூன்று கோரிக்கைகளை, சர்வதேச சமூகத்தை நோக்கி முன்வைக்கின்றது.**

– சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும்.
– தமிழர்களின் அரசியற் தீர்வுக்கு சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும்.
– இலங்கைத்தீவில் தமிழர் தாயகப்பகுதியில் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும்

இவைகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மேலதிகமாக முன்வைக்கப்பட்டுள்ள மூன்று கோரிக்கைகளாகும்.

2009ல், பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தினை ஆக்கிரமிப்புச் செய்த, சிங்கள பேரினவாதம், தமிழர் தேசத்தை மட்டுமல்ல, தமிழர்களையும் நிரந்தர அடிமையாக வைத்திருக்கின்ற போக்கிலேயே, தனது இராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக்கி வருகின்றது. ஆக்கிரமிப்பு இராணுவத்தினை தமிழர் தாயகத்தில் நிரந்தரமாக்கி, அதன் பாதுகாப்புடன் தமிழர் தேசத்தை பௌத்தமயமாக்கியும், சிங்களமயமாக்கியும் வருகின்றது. தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலையோ, அதற்கான பரிகாரநீதியினையோ வழங்கவும் ஏற்றுக்கொள்ளவும் மறுத்து வரும் சிங்கள அரச பேரினவாதம், அபிவிருத்தி அரசயில் என்ற பெயரில் தமிழர் தேசத்தின் வளங்களையும் காணிகளையும் பல்வேறு வகையில் சுரண்டி வருகின்றது.

மறுபுறம், இலங்கைத்தீவை ஈ போல் மொய்த்துள்ள சர்வதேச சக்திகள், தமது நலன்களை அடைவதிலேயே குறியாக இருக்கின்றன. தமிழர்களின் மனித உரிமை விவகாரங்களையும், தமிழர்களின் வாக்குகளையும் தமது நலன்களை அடைவதற்குரிய தந்திரோபாயங்களாக இச் சர்வதேச சக்திகள் கையாண்டு வருகின்றன. இதற்கு உதாரணமாக ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்காவின் விருப்பத்துக்கு மாறாக மேலதிகமாக வழங்கப்பட்ட 2 ஆண்டு கால அவகாசமும், 2015 அதிபர் தேர்தலும் சமீபத்திய உதாரணங்களாக உள்ளன.

இத்தகையொரு நிலையில்தான், தமிழர்கள் தமது நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான வேட்கையினை பல்வேறு வகையிலும் வெளிக்காட்டி வருகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில் மே-18 முள்ளிவாய்க்கால் தமிழீழத் தேசிய துக்க நாளிலாக்கட்டும், நவ-27 மாவீரர் நாளாகட்டும், இந்நிகழ்வுகளில் தமிழ்மக்கள் வெளிப்படுத்தி வருகின்ற உணர்வெழுச்சியினை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அதன்வரிசையில், அன்று 'பொங்குதமிழ்' எவ்வாறு மக்கள் எழுச்சியும் வடிவமாக தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் இருந்ததோ, அதுபோலவே தற்போது எழுச்சியின் வடிவமாக எழுகதமிழ் எழுகின்றது. இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருந்தாலும், தமதுக்கு கிடைக்கின்ற வெளியில் தமது உணர்வுகளையும் வெளியுலகிற்கும், சிங்கள தேசத்திற்கும் எடுத்துக்காட்டும் ஒரு எழுச்சி நிகழ்வாக இது இருக்கின்றது.

இந்தியப் பெருங்கடல் புவிசார் அரசியிலில், இலங்கைத்தீவு என்பது மேற்குலக சக்திகளின் இந்தோ-பசுபிக் மூலோபாயத்தில் கேந்திர முக்கியத்துவம் உள்ள ஒன்றாக இருப்பதோடு, தமிழர் தேசம், இக்கேந்திரத்தின் மையப்புள்ளியாகவும் இருக்கின்றது.

இதனை முன்னுணர்ந்தே இலங்கைத்தீவில் இரண்டு தேசங்கள் என்ற நிலைப்பாட்டில், தமது பாதுகாப்புக்கும் இறைமைக்குமான ஆயுதப் போராட்டத்தினை நடத்தியிருந்தனர். ஆயுதப் போராட்டத்தின் வலு, தமிழர்களை சக்திமிக் ஒரு தரப்பாக மாற்றியிருந்ததோடு, இலங்கைத்தீவில் தமிழர்களின் வலுச்சமநிலையினை பேணியிருந்தது.

தற்போதைய புவிசார் அரசியல் இலங்கைத்தீவை மையங்கொண்டுள்ள நிலையில், தமிழர்கள் தம்மை சக்திமிக்க தரப்பாக இப்புவிசார் அரசியலில் மாறுவதற்குரிய, மாற்றுவதற்குரிய ஓர் திரட்சியாக எழுகதமிழ் அமையவேண்டும்.

இதுவே தமிழர்களுக்கான நீதியையும் அரசியல் இறைமையினையும் இலங்கைத்தீவில் பெற்றுக் கொள்வற்குரிய வலுவினை ஏற்படுத்தும். அதனை நோக்கி 'எழுகதமிழ்' தமிழர் தேசத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் எழுச்சி கொள்ளட்டும்.

– சுதன்ராஜ்

Suthanraj
சுதன்ராஜ்
+33 7 55 16 83 41
email us here


Source: EIN Presswire